என்னைக்கும் கலங்கலையே இன்னைக்கு கலங்குறவ..(எச்ஐவியால் பாதிக்கப்பட்ட தாயின் கண்ணீர் கடிதம்)

கட்டின புருசன்..என்ன

காடுவர கூடவரன்னு

காலிமேல சத்தியமும்

காலுவிரலுல மிஞ்சியும்

கழுத்துல தாலியும்

கட்டிபோன ஆசமச்சா..

கண்கசங்க கூடாதடி

கண்ணுபொண்ணே நீ என் சீவனடினு பேசிப்போன பாச மச்சா…

கடுநோயி தாக்கி நீயும் கட்டுன என்ன விட்டு..காதவழியில போகுறப்போ கலங்குசிய்யா எம்மனசு..

கண்ணீர் ஒன்னும் சிந்தலையே

கட்ட மேனிக்கு நான்நின்னே..கண்ணீர் ஒன்னும் சிந்தலையே

கட்ட மேனிக்கு நான்நின்னே..

நாம கழிச்ச நாளோட நிதர்சனமா பொறந்து நின்ன

நல்லபிள்ள அழுகுதய்யா நாடிநரம்பு வாடுதய்யா…

நீ போயும் நா வாழ …

நின்ன பிள்ள சிரிச்சுதய்யா..

நின்ன பிள்ள சிரிச்சுதய்யா..

பாலூட்டி வளர்த்த பிள்ள

பால்நிலாவுல ஆச்சிதான்னு அறியாம சிரிச்சபிள்ள…

அப்பத்தாவ காணோம்னு அழுதுச்சுயா எங்கிட்ட..

அப்பாவ கேட்டிடாம உறங்கிபோக வேணும்னு..

நேந்துகிட்டே சாமிக்கிட்ட..

அப்பாவ கேட்டிடாம உறங்கிபோக வேணும்னு..

நேந்துகிட்டே சாமிக்கிட்ட..

தன்னந்தனி நாளுக்குள்ள

என்ன தள்ளிவிட்ட கருப்பசாமி

தளிர்போல பிள்ள உன்ன கொடுத்துச்சுத்தா கொணந்து வாழ …

ஈவுஇரக்கமில்லா கருப்பசாமி..

என் ஈமநாள குறிச்சட்டுல கொடுத்துச்சு உன்ன…

என்ன பெத்த ஆத்தா உன்ன

மாணாங்கண்ணியா நடிச்சு நானும் …நல்லாத்தான் இருக்கேன்னு நம்ப வச்சேன் புரியலையா…

ஆசப்பட்டு வாங்கலையே ஆத்தாவும் சொல்லலையே..

ஆளக்கொள்ளும் நோயி ஒன்னு வந்துச்சுன்னு..

நான் என்னத்த கண்டேனய்யா..

நாடு ஒதுக்கும் நாளும் பேசும்னு

நான் என்னத்த கண்டேனய்யா..

அன்னைக்கு நீ விட்டு போகையில கல்லுமாறி நின்னபிள்ள..

கடந்துத்தா போகலாம்னு நெனச்ச பிள்ள

என்னைக்கும் கலங்கலையே..

இன்னைக்கு கலங்குறவ..

பிஞ்சு உன்ன ஊருசேந்து பிரிச்சு வைக்க தாங்கலையே…

கூட சேரவந்த பிள்ளைய வெறுத்து ஒதுக்க தாங்கலையே…

கல்லுமாறி நின்ன பிள்ள

என்னைக்கும் கலங்கலையே..

இன்னைக்கு கலங்குறவ..

உன்ன விட்டு நா பிரிஞ்சா ஊரு உன்ன ஒத்துக்கும்னு..

உலகஞ்சொல்லி கேட்ட நானு..

கருப்பசாமி உன்ன நம்பி ..

கதறுனனே காடு போக…

சீவன் இருக்கும் வர காதுங்கேக்லையே..கண்ணு கூட தெரியலையே..கருப்பசாமி உனக்கு..

உயிர எடுக்க கேக்கையில

உடனேல கேட்டுச்சுய்யா

என் குரலு..

நல்லதுய்யா நல்லதுய்யா

எம்பிள்ள சிரிக்குமய்யா..

கூடி சேந்து ஆடுமய்யா விளாடுமய்யா..

என்ன போகச்சொன்ன ஊரு முன்ன

வாழுமய்யா..

வாழ்ந்து செயிக்குமய்யா…

– கவிஞர் . மகிழ்

Advertisements

​ரௌத்திரம் பழகு


தாலி கட்டிய மனைவி தாலியின்றி காத்து கிடக்க … வீட்டு அடுப்பில் பூனை உறங்க…

அடுப்பின் உபயோகம் தெரியாமல் குட்டி மழலை அதை சுற்றி விளையாடும் அவலம் கேட்கவில்லை …

அந்த சாக்கடை ஓரமிருந்து செவ்வாய் கிரகம் நோக்கி பயணித்துக் கொண்டிருக்கும் அந்த குடும்ப தலைவனுக்கு…

ரௌத்திரம் பழகு…காதல் என்பதோர் புனிதச்சொல்…புனிதச்சொல்லில் தொடங்கி..

மாதர்தம் மெய் தொடும் சாவியாய்மாறிபின்…

உயிரையும் மாய்த்து விடும் மரணச்சொல்லில் முடித்தது விதி..

முடித்தது யாரோ இத்துறை வித்தகன்தான்…ஆனால் பழி

பாவம் விதி மேல்……

ரௌத்திரம் பழகு…


பல காரும் போகுதய்யா..பல்லக்கும் போகுதய்யா ..

அங்கே கீழே கிழவன் விழுந்துகிடக்க.. 

வருந்தியதே கூட்டம் 

கிழவனின் வலியை கண்டா?

வழிமாறி போக வேண்டும் என்று..

இனி டேக் டைவர்சன் அல்லவா?

ரௌத்திரம் பழகு…


பொழப்பத்தேடி பாரீனுக்கு போனான் ஒருத்த..

பாக்குறதென்னமோ பத்து டாலர் உத்தியோகந்தா..

ஆனால் பகட்டோ தன் தாயின் மார்பை  சேலை போர்த்தி மறைக்க மறந்தவன்  போல் 

என்  தமிழை நாவினிக்க  உரைக்க மறந்ததென்று பிதற்றும் பாவியின் 

கடவுசீட்டு கசக்க பட வேண்டுமென்று …

ரௌத்திரம் பழகு…


தன் இனத்தை தானே அழித்த வரலாறு மனிதனை தவிர வேறு எந்த மிருகத்திற்கும் இல்லையம்மா

அன்று என் தங்கை கருவறுக்கப்பட்டு கிடக்கையில்

என் தமயருள் ஒருவர் கூட வரவில்லை…

அன்று பழகிக்கொண்டேன் ரௌத்திரத்தை…

பார் போற்றும் பாரதி சொன்ன மனிதனாக வேண்டாம்…

பாதி மனிதனாய் இரு போதும்.. 

                                      கவிஞர்.மகிழ்